பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் மசோதா, மக்களவையில் (Dewan Rakyat) அதன் இரண்டாம் கட்ட வாசிப்புக்குத் தயாராக உள்ளதாகச் சட்ட மற்றும் நிறுவன சீர்திருத்த அமைச்சர் அஸலினா ஒத்மான் சைட் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இந்த மசோதாவைச் சமர்ப்பிப்பதா என்பது குறித்து முடிவெடுப்பது அவையின் தலைவரான பிரதமர் அன்வார் இப்ராஹிமின் கையில் உள்ளது என்று அவர் கூறியதாக ‘பெர்னாமா’ செய்தி வெளியிட்டுள்ளது.
அடுத்த மக்களவைக் கூட்டத்தொடர் அக்டோபர் 5-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
“அனைத்தும் தயாராக உள்ளன. (பிரதமரின்) பதவிக்காலத்தைக் கட்டுப்படுத்துவதற்கான பணிகள் முடிந்துவிட்டன. வரவிருக்கும் கூட்டத்தொடரில் இதை வாக்கெடுப் புக்குக் கொண்டுவருவதா என்பது அவையின் தலைவரான பிரதமரின் முடிவைப் பொறுத்தது,” என்று ‘கொரோனர்ஸ்’ (Coroners) மசோதா குறித்த பொதுக் கருத்துக்கணிப்பை இன்று தொடங்கிவைத்த பிறகு அஸலினா கூறினார்.
கூட்டாட்சி அரசியலமைப்பில் திருத்தங்க ளைச் செய்வதை உள்ளடக்கியுள்ளதால், இந்த மசோதாவுக்கு மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை என்று அவர் குறிப்பிட்டார்.




