வாடிக்கையாளர்களுக்குக் குடியேற்றச் சேவைகளை வழங்கும் சட்டவிரோத முகவர்களாகச் செயல்பட்ட வெளிநாட்டுத் தம்பதியினர் குடியேற்றத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு மாத கால கண்காணிப்புக்குப் பிறகு, செப்டம்பர் 11 அன்று அம்பாங்கில் இந்த வியட்நாமிய தம்பதி கைது செய்யப் பட்டதாக குடியேற்றத் துறை தலைமை இயக்குநர் டத்தோ சகாரியா ஷாபான் தெரிவித்தார்.
“குழுவினர் ஒரு குடியிருப்பு வளாகத்தில் சோதனை நடத்தி, 34 வயதான அந்த வியட்நாமிய தம்பதியினரைக் கைது செய்தனர். அவர்களின் குழந்தையாகக் கருதப்படும் 10 மாத ஆண் குழந்தையும் அங்கு கண்டெடுக்கப்பட்டது.
“அந்த இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில், ஏழு வியட்நாமிய கள்டப்பிதழ்மற்றும் வியட்நாமிய அதிகார அமைப்பின் முத்திரைகள் என சந்தேகிக்கப்படும் ஐந்து போலி முத்திரைகள் கைப்பற்றப்பட்டன.
“மேலும், ஒரு கைபேசி, ஒரு கணினி, அந்த வளாகத்திற்கான வாடகை ஒப்பந்த நகல், பல வியட்நாமிய குடியுரிமை சரிபார்ப்புப் படிவங்கள் மற்றும் வியட்நாமிய கடவுச்சீட்டு விண்ணப்பப் படிவங்கள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.
“குறிப்பாக வியட்நாமிய நாட்டினருக்குக் குடியேற்றம் தொடர்பான சேவைகளை வழங்குவதன் மூலம் இத்தம்பதியினர் சட்டவிரோத முகவர்களாகச் செயல்பட்டது ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தடுப்பு முகாம்களில் உள்ள ஆவணமற்ற குடியேறிகளுக்கு, அனுமதிச் சீட்டு (pass) கால நீட்டிப்பு, சிறப்பு அனுமதிச் சீட்டுகள் மற்றும் வியட்நாமுக்குத் திரும்புவதற்கான விமான டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்தல் ஆகியவை அவர்கள் வழங்கிய சேவைகளில் அடங்கும்.
“விண்ணப்பம் அல்லது ஏற்பாட்டின் வகையைப் பொறுத்து, ஒரு நபருக்கு 12,000 ரிங்கிட் வரை இச்சேவைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இச்செயல்பாடுகள் 2025-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருவதாக நம்பப்படுகிறது,” என்று அவர் திங்கள்கிழமை (செப்டம்பர் 14) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
விசாரணையில், அந்த ஆணின் அனுமதிச் சீட்டு காலாவதியாகியும் அவர் தொடர்ந்து நாட்டில் தங்கியிருந்தது தெரியவந்தது; அதேவேளையில், அந்தப் பெண் வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்ணுக்கான அனுமதிச் சீட்டை வைத்திருந்தார்.




