சமீபத்தில் நடைபெற்ற அம்னோ பொதுக்கூட்டத்தில் மதகுருமார்கள் குறித்து கேலிப் பேச்சு பேசிய நபர் உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும் என்று டத்தோ டாக்டர் அக்மல் சலே வலியுறுத்தியுள்ளார்.
மதம் சார்ந்த விஷயங்களை கேலிப் பொருளாக மாற்றக்கூடாது என்று அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் கூறினார். “ஒருவேளை அந்த கேலிப் பேச்சு ஓர் இமாம் மற்றும் முஸ்லிம்கள் குறித்து இருந்திருந்தால், நாங்கள் கோபப்பட்டி ருப்போம்.
“இதேபோன்ற செயல் எங்களுக்கு இழைக்கப்படும்போது நாங்கள் கோபப்படுகிறோம் என்றால், நாமும் மற்றவர்களுக்கு அதைச் செய்யக்கூடாது.
“அந்த நபர் அனைத்து மலேசியர்களிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்,” என்று அவர் திங்கள்கிழமை (செப்டம்பர் 14) தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.
அந்த நபரின் கருத்து அம்னோவின் நிலைப்பாட்டை எந்த வகையிலும் பிரதிபலிக்கவில்லை என்றும், அது அவரது தனிப்பட்ட கருத்து என்றும் அவர் கூறினார்.
சபா பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோ ஆர்தர் குருப், செப்பாங் அம்னோ பிரிவுத் தலைவர் டத்தோ நூராஸ்லி சைட் உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும் என்று கூறினார்.
புண்படுத்தும் மற்றும் மனவேதனை அளிக்கும் அந்தப் பேச்சுக்காக, குறிப்பாக மலேசிய கிறிஸ்தவர்களிடம், நூராஸ்லி எந்த நிபந்தனையுமின்றி மன்னிப்பு கோர வேண்டும் என்று அவர் கூறினார்.
“அந்தப் பேச்சு மிகவும் பொருத்தமற்றது, வரம்பு மீறியது மற்றும் ஒரு அரசியல் தலைவரின் முதிர்ச்சியைப் பிரதிபலிக்காதது என்பதை நான் உறுதியாகக் கூற விரும்புகிறேன்,” என்று பார்ட்டி பெர்சத்து ரக்யாட் சபா (PBRS) தலைவரான அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
“அரசியல் கருத்து வேறுபாடுகள் ஒருபோதும் மற்ற மதத்தையோ அல்லது அதன் பின்பற்றுபவர்களின் நம்பிக்கைகளையோ சிரிப்புக்காகவோ அல்லது கைதட்டலுக்காகவோ கேலி செய்வதற்கான உரிமையை யாருக்கும் வழங்குவதில்லை,” என்று அவர் கூறினார். கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 12) கிறிஸ்தவம், மதகுருமார்கள், கன்னியாஸ்திரிகள் மற்றும் பைபிள் குறித்து தரக்குறைவான கருத்துக்களை வெளியிட்ட நூராஸ்லியின் பேச்சை அவர் கண்டித்தார்




