மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC), தொழிலதிபர்களான நசீர் ஹுசின் அக்தர் ஹுசின் மற்றும் முபாரக் ஹுசின் அக்தர் ஹுசின் ஆகியோரைத் தங்கள் சொத்து விவரங்களை அறிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
நசீர், அக்டோபர் 20 அன்று புத்ராஜெயாவில் உள்ள MACC தலைமையகத்திற்கு நேரில் சென்று சொத்து விவரங்களை அறிவிப்பதற் கான அறிவிக்கையைப் பெற்றுக் கொண்டார்; முபாரக் தனது இல்லத்தில் இந்த அறிவிக்கையைப் பெற்றுக் கொண்டார்.
இது குறித்து வினவியபோது, MACC தலைமை ஆணையர் அப்துல் ஹலீம் அமான் இந்தத் தகவலை உறுதிப்படுத்தி னார்.
சுமார் 10 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தத்தில் நிதி முறைகேடு மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, இந்தச் சகோதரர்கள் மீது ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
‘யாயாசான் பேங்க் ரக்யாட்’ (Yayasan Bank Rakyat) அமைப்பின் முன்னாள் தலைவரான நசீர், அந்த அமைப்பு முதலீடு செய்த 10 மில்லியன் ரிங்கிட் நிதி முறைகேடு தொடர்பான விசாரணையில், MACC தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும், தனது இல்லத்திலும் தனது சகோதரரின் இல்லத்திலும் MACC நடத்திய சோதனைகளையும், ஏழு நாள் காவலில் இருந்தபோது அவர்கள் நடந்துகொண்ட விதம் தொழில்முறைக்கு மாறானதாக இருந்ததாகவும் அவர் விமர்சித்திருந்தார்.
இந்தச் சோதனைகளின்போது, 31 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 15 சொகுசு கார்கள், 5 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 12 அதிவேக மோட்டார் சைக்கிள்கள், ஐந்து சொகுசு கைக்கடிகாரங்கள், மூன்று வளையல்கள் மற்றும் சுமார் 30,000 ரிங்கிட் ரொக்கப் பணம் ஆகியவற்றை MACC பறிமுதல் செய்தது. மேலும், சுமார் 2 மில்லியன் ரிங்கிட் இருப்பு கொண்ட இவர்களது இரண்டு தனிப்பட்ட வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன




