வயதான காலத்தில் வரக்கூடிய ஆரோக்கிய குறைபாடுகள் இப்போது நடுத்தரவயதிலேயே தலைதூக்க ஆரம்பித்துவிடுகிறது. பொதுவாக 60 வயதைக் கடந்தாலே உடல் தளர்ச்சி, மூட்டு வலி, உடல்நலப் பிரச்சினைகள் எனப் பல்வேறு சவால்கள் ஏற்படுவது இயல்பு. ஆனால், 90 வயதிலும் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டு, இளம் வயதினருக்கு இணையாக உடற்பயிற்சி செய்து, சர்வதேச அளவிலான ஆணழகன் போட்டியில் பங்கேற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் கனசாவா (Toshisuke Kanazawa) என்ற தாத்தா
ஸ்பெயின் நாட்டின் சாண்டா சுசானாவில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் பங்கேற்பதற்காக ஜப்பானில் இருந்து நீண்ட தூரம் பயணம் செய்து வந்துள்ளார். அங்கு 50 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் போட்டியிட்ட அவர், தனது வயதைப் பொருட்படுத்தாமல் போட்டிக்கான உடல் தயாரிப்புகளில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார்.
உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் தாத்தா மேடையேறுவதற்கு முன்பாக இளம் வீரர்களுக்கு இணையாக உடற்பயிற்சி மேற்கொண்டதுடன், போட்டிக்கான உடல் தயாரிப்புகளிலும் ஈடுபட்டார். கூடவே உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கத் தேவையான பயிற்சிகளிலும் கவனம் மேற்கொண்டார். இவரை பார்த்து இளம் போட்டியாளர்களும் வாயடைத்து போயினர்.
வயது அதிகரித்தாலும் 90 வயதில் மேடையேறி, தனது உடற்கட்டையும் தசை வலிமையையும் வெளிப்படுத்திய அவரது முயற்சி பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. வயது அதிகரித்தாலும், தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை உலகுக்கு உணர்த்துவதே தனது நோக்கம் என்கிறார் கனசாவா.




