பொந்தியான்: மலேசியா தொடர்ந்து நல்ல முறையிலும் தூய்மையாகவும் நிர்வகிக்கப்பட்டால், விரைவான முன்னேற்றத்தை அடைய அசாதாரண ஆற்றல் உள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறுகிறார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார செயல்திறன், நிர்வாக ஸ்திரத்தன்மை மற்றும் அரசாங்கக் கொள்கைகளில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையால் உந்தப்பட்டு மலேசியா வலுவான நிலையில் இருப்பதைக் காட்டுகிறது என்று அவர் கூறினார்.
நிதியமைச்சராகவும் இருக்கும் அன்வார், நாட்டின் பொருளாதார வளர்ச்சி செயல்திறன், குறிப்பாக கடந்த ஆண்டின் நான்காவது காலாண்டில், அரசாங்கத்தின் எதிர்பார்ப்புகளை விட அதிகமாக இருந்தது என்றார். “கடந்த ஆண்டின் இறுதி காலாண்டில் எங்களுக்குக் கிடைத்த புள்ளிவிவரங்க ளால் நிதியமைச்சர் என்ற முறையில் நானே ஆச்சரியப்பட்டேன்.
“நாங்கள் சுமார் 5.4 முதல் 5.5 சதவீத பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்த்தோம், ஆனால் மலேசியா கடந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் 6.4 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்தது,” என்று அவர் இன்று பொந்தியான் மருத்துவமனை மற்றும் ராக்யாட் மடானி கார்னிவல் விரிவாக்கத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கூறினார்.
இந்த சாதனை அரசியல் பிரச்சாரம் அல்ல, மாறாக நாட்டின் பொருளாதார அடிப்படைகளின் வலிமையையும் அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்ட கொள்கைகளின் செயல்திறனையும் பிரதிபலிப்பதாக அன்வார் கூறினார்.




