ஜாலான் கிளேங் லாமா சாலையில் போக்குவரத்து விதிக்கு எதிராக வாகனம் ஓட்டிய இ-ஹெய்லிங் ஓட்டுநருக்கு, கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மூன்று நாள் சிறைத் தண்டனையும், RM6,000 அபராதமும் விதித்தது. வோங் கோக் கோங்கின் ஓட்டுநர் உரிமமும் ஐந்து ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டது.
ஏப்ரல் 5 ஆம் தேதி காலை 9.44 மணிக்கு ஜாலான் கிளாங் லாமா சாலையில் அஜாக்கிரதையாகவும் அபாயகரமாகவும் வாகனம் ஓட்டிய குற்றத்தை 32 வயதான வோங் ஒப்புக்கொண்டதை அடுத்து, மாஜிஸ்திரேட் டிஜி சியாஸ்வானி யாஸ்மின் துவான் ரோஸ்லான் இந்தத் தண்டனையை வழங்கினார்.
வோங் தனது சிறைத் தண்டனையை இன்றே அனுபவிக்கத் தொடங்க வேண் டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் தனது அபராதத்தையும் செலுத்தி னார்; இல்லையெனில், அவர் கூடுதலாக ஆறு மாதங்கள் சிறைத்தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்.
வோங் மீது 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 42(1)-இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது. இப்பிரிவின்படி, குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை, RM15,000 வரை அபராதம், மற்றும் குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கவோ அல்லது பெறவோ தகுதியிழப்பு விதிக்கப்படும். துணை அரசு வழக்கறிஞர் நர்பத்ரிசியா ரசிப், இது ஒரு பாடமாக அமையும் வகையில் பொருத்தமான தண்டனையை வழங்கக் கோரினார்.




