பினாங்கில் அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயத்தில் நடைபெற்ற கவியரசு கண்ணதாசன் நூற்றாண்டு அறிமுக விழாவைத் தொடக்கி வைத்துத் தலைமை உரையாற்றினார் டத்தோஸ்ரீ எம் சரவணன். அவர் தமதுரையில் கவியரசு இயற்றிய பினாங்கு தண்டாயுதபாணி ஆலயத்திற்கான பிரத்தியேகக் கவிதையின் கல்வெட்டினைத் திறந்து வைக்கும் அரிய பாக்கியத்தை பெற்றதில் மனம் அளவில்லா மகிழ்ச்சி அடைகிறது என்றார் அவர்.
கவியரசு கண்ணதாசன் தமிழ் இலக்கியத்திற்கும், திரைப்படப் பாடல்களுக்கும் அளித்த பங்களிப்பு அளவிட முடியாதது. மனித மனத்தின் நுணுக்கமான உணர்வுகளை எளிய சொற்களில் ஆழமாகப் பதிவு செய்யும் அபூர்வத் திறமை அவருக்கே உரியது.
அவர் எழுதிய வரிகள் காலத்தைத் தாண்டி இன்று வரை மக்களின் உள்ளங்களில் ஒலித்துக் கொண்டிருக் கின்றன. கவிதை என்பது வெறும் சொற்களின் அலங்காரம் அல்ல, அது வாழ்க்கையின் அனுபவங்களின் சுருக்கம் என்பதை அவர் தனது படைப்புகளால் நிரூபித்தார்.
இந்த ஆலயத்திற்கு அவர் அருளிய பிரத்தியேகக் கவிதை, ஆன்மிகம் இலக்கியம் ஆகியவை ஒன்றிணையும் சின்னமாக என்றும் விளங்கட்டும். கவியரசு கண்ணதாசன் நூற்றாண்டுக் கொண்டாட்டம் ஒரு நினைவு நிகழ்ச்சி மட்டுமல்ல, அது தமிழ் மொழியின் பெருமையையும், அதன் இலக்கியச் செழுமையையும் உலகறியச் செய்யும் ஒரு பண்பாட்டு நிகழ்வாகும்.
கவியரசரின் புகழ் என்றும் நிலைத்திரு க்க, அவரது படைப்புகள் தலைமுறைகள் தாண்டி தமிழரின் உள்ளங்களில் ஒளிரட்டும் என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் ம.இ.கா தேசியத் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் கூறினார்




