அதிகரித்துள்ள உலகளாவிய பதட்டங்களுக்கு மத்தியில், தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்திற்குப் பிளவுகளை ஆழப்படுத்துவதற்குப் பதிலாகப் பாலங்களைக் கட்டும் குரல்கள் தேவை என்று பிகேஆர்துணைத் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வர் தெரிவித்துள் ளார்.
பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் எரிசக்திப் பாதுகாப்பைப் பேணுவதற்கு ஈடுபாடு அவசியம் என்பதால், மலேசியா தெளிவு, உறுதிப்பாடு மற்றும் சுதந்திரத்துடன் இராஜதந்திரத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கும் என்று அவர் கூறினார்.
இத்தகைய விடயங்களில் பிரதமர் அன்வார் இப்ராஹிமின் ஈடுபாடு, பிராந்தியத்தின் பரந்த நலன்களைப் பாதுகாப்பதில் வேரூன்றியுள்ளது என்று நூருல் இஸ்ஸா வலியுறுத்தினார். இதற்கு மாறாகக் கூறுவது, நீண்ட காலமாக அமைதியைப் பேணிவரும் கருவிகளைச் சீர்குலைத்துவிடும் என்றும் அவர் மேலும் கூறினார்.
“இராஜதந்திரம் கைவிடப்படக்கூடாது, மாறாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற கொள்கையை மலேசியா தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறது,” என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.
ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வது தொடர்பான ஈரானுடனான பேச்சு வார்த்தைகளை சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் சமீபத்தில் நிராகரித்ததற்குப் பதிலளிக்கும் வகையில் அவரது கருத்துக்கள் வெளியிடப்பட்டன.




