Vimarsagan Media

Home » Malaysia » பாலத்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட விபத்து:- 27 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மரணம்

பாலத்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட விபத்து:- 27 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மரணம்

வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் (என்எஸ்இ) வியாழக்கிழமை (ஜூன் 11) காலை எட்டு மணியளவில் நேர்ந்த விபத்தில் 27 வயது மோட்டார் சைக்கிளோட்டி மரணமடைந்தார். நகரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அந்த மோட்டார்சைக்கிளோட்டியை அவருக்குப் பின்னால் வந்த மற்றொரு மோட்டார்சைக்கிள் மோதியது.

விபத்தின் தாக்கத்தால் விரைவுச்சாலைப் பாலத்தில் இருந்து அவர் தூக்கிவீசப் பட்டு, கீழே உள்ள பாசிர் கூடாங் நெடுஞ்சாலையில் விழுந்ததாக ஜோகூர்பாரு தெற்கு வட்டாரக் காவல்துறை துணை ஆணையர் ராவுப் செலாமட் தெரிவித்தார். மரணமடைந்த மோட்டார்சைக்கிளோட்டி சிங்கப்பூரில் பணியாற்றி வந்தவர் என்றும் வேலைக்கு வந்துகொண்டிருந்த. போது விபத்து நேர்ந்தது என்றும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது பெய்துகொண்டிருந்த மழையால் சாலைகளில் போக்குவரத்து மெதுவாகவே சென்றதையும் துணை ஆணையர் குறிப்பிட்டார். பாலத்திலிருந்து விழுந்தவருக்குத் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு, கால் முறிந்துபோனது. சம்பவ இடத்திலேயே அவர் மரணமடைந்தது உறுதிசெய்யப்பட்டது.

விபத்தில் சிக்கிய மற்றொரு மோட்டார்சைக்கிளோட்டிக்கு முகத்திலும் வலக்கையிலும் காயங்கள் ஏற்பட்டன. சுல்தான் இஸ்மாயில் மருத்துவ மனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்த காவல்துறை விசாரணை தொடர்கிறது.

Scroll to Top