தங்கள் சொந்த நாட்டில் நடந்த இரயில் தண்டவாள குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும், தலைமறைவான இரண்டு இந்தியக் குற்றவாளிகளை மலேசிய அரச காவல் துறை (PDRM) நாடு கடத்தியுள்ளதாக உறுதி செய்துள்ளது.
இவ்விருவரையும் கண்டறிந்து கைது செய்ய உதவுமாறு இந்திய அதிகாரிகள் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையால் (JSJ) இந்த நாடு கடத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரல் 27 அன்று இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவில் நடந்த ரயில் தண்டவாள குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வருவதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை (JSJ) இயக்குநர் டத்தோ எம் குமார் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த நெருங்கிய ஒத்துழைப்பு, உலகளாவிய பாதுகாப்புப் பிரச்சினைகளைக் கையாள்வதில் காவல்துறையின் தீவிரத்தைக் காட்டுகிறது.
“இந்த ஒத்துழைப்பு, எல்லை தாண்டிய குற்றங்களை எதிர்த்துப் போராடுவதிலும், அனைத்துலக அளவில் பாதுகாப்பு ஒருங்கிணைப்புகளை வலுப்படுத்துவதிலும் மலேசிய காவல்துறையின் (PDRM) தொடர்ச்சியான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது,” என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.
இதற்கிடையில், வெளிநாட்டுத் தப்பியோடியவர்களுக்கு மலேசியா ஒரு இடைவழி அல்லது மறைவிடமாக மாறுவதை மலேசிய காவல்துறை பொறுத்துக்கொள்ளாது என்றும், அதை உறுதி செய்யும் என்றும் அவர் வலியுறுத்தினார்.




