பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷா ஆலம் இலகுரக ரயில் பாதை (முன்னர் LRT3 என அழைக்கப்பட்டது) திங்கட்கிழமை முழு செயல்பாட்டிற்கு வரவிருப்பதாக போக்குவரத்து அமைச்சர் அறிவித்து உள்ளார்.
ஒரு நாள் முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை யன்று தொடக்க விழா நடைபெறும் என்றும், அதனை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தொடங்கி வைப்பார் என்றும் அந்தோனி லோக் கூறினார்.
“இந்த விழா தற்போது ஷா ஆலம் இலகுரக ரயில் பாதையின் பிரதான பணிமனையில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது,” என்று அவர் நேற்று இங்குள்ள டெர்மினல் பெர்செபாடு செலத்தானில் (TBS) சாலைப் போக்குவரத்துத் துறையின் (JPJ) புதிய விற்பனை நிலையத்தைத் திறந்து வைத்த பிறகு கூறினார்.
ஷா ஆலம் இலகுரக ரயில் திட்டம் 2017-ல் தொடங்கப்பட்டு, 2025-ல் செயல்பாட்டிற்கு வரவிருந்தது. இருப்பினும், சோதனை மற்றும் செயல்பாட்டுக்குக் கொண்டு வரும் கட்டத்தின் போது கண்டறியப்பட்ட அமைப்பு நிலைத்தன்மை மற்றும் மென்பொருள் சிக்கல்கள் காரணமாக பல தாமதங்கள் ஏற்பட்டன.
37.8 கி.மீ நீளமுள்ள இந்த வழித்தடத்தில் 25 நிலையங்கள் உள்ளன. இது பண்டார் உத்தாமாவிலிருந்து ஜோஹான் செத்தியா வரை செல்கிறது. பண்டார் உத்தாமா (காஜாங் எம்.ஆர்.டி) மற்றும் கிளென்மாரி (கெலானா ஜெயா எல்.ஆர்.டி) ஆகிய இடங்களில் பரிமாற்ற நிலையங்கள் உள்ளன.
கிளென்மாரி 2, ஸ்டேடியம் ஷா ஆலம், டத்தோ மந்திரி, யுஐடிஎம் ஷா ஆலம், பண்டார் பாரு கிளாங், பாசார் கிளாங் மற்றும் பண்டார் புக்கிட் திங்கி ஆகியவை இதன் முக்கிய நிறுத்தங் களில் அடங்கும்.
மே 28 அன்று சான் சோ லின் எல்.ஆர்.டி நிலையத்திற்கு அருகே நடந்த ரயில் தடம் புரண்ட சம்பவம் குறித்து, அம்பாங் வழித்தடத்தில் சீரமைப்புப் பணிகள் இன்னும் நடைபெற்று வருவதால், இந்த வாரம் முழுமையான அறிக்கை தயாராகிவிடும் என்று லோக் கூறினார்.
புதிய டிபிஎஸ் ஜேபிஜே விற்பனை நிலையம் குறித்து, சேவையின் தரம் மற்றும் வேகத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு புதிய டிஜிட்டல் வசதிகளை ஒருங்கிணைப்பதன் மூலம் பொது மக்களின் அணுகலை அதிகரிப்பதே இதன் நோக்கம் என்று லோக் கூறினார்




