பொதுச் சேவைத் துறையில் ஆகஸ்ட் 1 முதல் ‘கலப்பு பணி முறை’ (Hybrid Work Day – HBH) புதிய நடைமுறையாகச் செயல்படுத்தப்பட அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக பொதுச் சேவைத் துறை (PSD) தெரிவித்துள்ளது.
இந்த புதிய ஏற்பாட்டின் கீழ், பணித் தேவைகள், பணியின் தன்மை மற்றும் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அரசு ஊழியர்கள் இரண்டு நாட்கள் வீட்டிலிருந்தோ அல்லது துறைத் தலைவரால் அங்கீகரிக்கப்பட்ட மாற்று இடத்திலிருந்தோ பணியாற்றவும், மூன்று நாட்கள் அலுவலகத்தில் பணியாற்றவும் அனுமதிக்கப் படுவார்கள்.
இன்று வெள்ளிக்கிழமை (ஜூன் 26) வெளியிடப்பட்ட அறிக்கையில், தற்போதுள்ள ‘வீட்டிலிருந்து பணிபுரியும் முறைக்கு’ (WFH) மாற்றாக இந்த HBH கட்டமைப்பு அமையும் என்று துறை கூறியது.
“பணித் தேவைகள், செயல்பாட்டுக்கு ஏற்ற தன்மை மற்றும் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அரசு ஊழியர்கள் இரண்டு நாட்கள் வீட்டிலிருந்தோ அல்லது துறைத் தலைவரால் அங்கீகரிக்கப்பட்ட மாற்று இடத்திலிருந்தோ பணியாற்றலாம்; மேலும் மூன்று நாட்கள் அலுவலகத்தில் பணியாற்றலாம்.
இது பணி நேரத்தைக் குறைக்காமல் அரசு ஊழியர்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மை கொண்ட பணி ஏற்பாடுகளை அறிமுகப்படுத்தும் ஒரு அரசாங்க முயற்சியாகும்,” என்று அந்த அறிக்கை தெரிவித்தது.
HBH முறையைச் செயல்படுத்துவது அத்தியாவசிய பொதுச் சேவைகளை வழங்குவதில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று பொதுச் சேவைத் துறை (PSD) உறுதியளித்தது.
பாதுகாப்பு, தற்காப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் நீதித்துறை உள்ளிட்ட துறை களில், நேரடி வருகை தேவைப்படும் கவுண்டர் சேவைகள் மற்றும் செயல் பாடுகள் வழக்கம் போல் தொடர்ந்து செயல்படும்.




