தொழில்நுட்பங்களை பயனீட்டாளர் களுக்கு மட்டுமே பயன்படுத்துவதோடு நிறுத்திவிடாமல், உள்நாட்டுப் புத்தாக்கங்களை உருவாக்கும் நாடாக உருவெடுப்ப தற்கான ‘மின்னிலக்க மலேசியா 2030’ தேசிய செயல்திட்டத்தை மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் திங்கட்கிழமை (ஜூன் 29) அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தார்.
இவ்வாண்டு முதல் 2030ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கிய இந்த வரைவுத் திட்டம், நாட்டின் மின்னிலக்க உத்திகளில் ஒரு மாபெரும் மாற்றத்தைக் குறிக்கிறது.
மலேசியாவின் மின்னிலக்க அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாமி ஃபட்ஸில், அரசாங்கத் தலைமைச் செயலாளர் சம்சூல் அஸரி அபு பக்கர் ஆகிய முக்கியத் தலைவர்கள் முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இந்த அதிநவீனச் செயல்திட்டத்தின்கீழ், 2030ஆம் ஆண்டுக்குள் அடைய வேண்டிய பல தலையாய இலக்குகளை மலேசிய அரசாங்கம் நிர்ணயித்துள்ளது. அதன்படி, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மின்னிலக்கப் பொருளியலின் பங்களிப்பை 30 விழுக்காடாக உயர்த்துதல், உயர் மதிப்புமிக்க 500,000 மின்னிலக்க வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், அரசாங்கச் சேவைகளை 95 விழுக்காடு முழுமையாக இணையவழிக்கு மாற்றுதல் மற்றும் மின்னிலக்கமயமாக்கல் மூலம் அரசாங்கத் துறையில் 4.5 பில்லியன் ரங்கிட் செலவினக் குறைப்பை ஏற்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும்.
‘2030க்குள் செயற்கை நுண்ணறிவு நாடு’ என்ற இலக்கை நோக்கி நாட்டை வழிநடத்தும் முதன்மை அமைப்பாக மின்னிலக்க அமைச்சு நியமிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம், பொருளியல், உள்கட்டமைப்பு, திறனாளர், சமூகம், நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு, புத்தாக்கம் ஆகிய ஏழு முக்கியக் கட்டமைப்புகளை மையமாகக் கொண்டு இந்த ‘மின்னிலக்க மலேசியா 2030’ திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
முழு அரசாங்க அணுகுமுறையைக் கொண்ட இந்த ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழும இயக்குநர்களாகச் செயல்படுவர்.




