பெடரல் நீதிமன்றத்தில் தனக்குக் கிடைத்த விடுதலை உறுதி செய்யப்பட்ட நிலையில் வெளியே வந்த சையட் சாடிக் சையட் அப்துல் ரஹ்மான், தனது போராட்டம் வெறும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கானதல்ல, மாறாகக் கொள்கை சார்ந்தது என்று அறிவித்தார்.
“மிக உயர்ந்த விலையைக் கொடுக்க வேண்டியிருந்தாலும், உண்மையை நிலைநாட்ட வேண்டும் என்ற கொள்கை சார்ந்த விஷயம் இது. ஆறு ஆண்டு களுக்கும் மேலாக நான் இந்தச் சட்டப் போராட்டத்தை எதிர்கொண்டேன். நான் ஓடி ஒளியவில்லை, காலதாமதம் செய்யவில்லை, அல்லது எந்தச் சிறப்புச் சலுகையையும் கோரவில்லை,” என்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டார்.
பதவிக்காகக் கொள்கையை விற்காமல், கொள்கைக்காகப் பதவியை இழக்கவும் துணிந்தவர்களால் மலேசியா வழி நடத்தப்பட வேண்டும். நான் எளிதான பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். அமைதியாக இருந்திருக்கலாம். அல்லது தலைவணங்கிச் சென்றிருக்கலாம்.”
மேலும் அவர் கூறியதாவது: “சோதனையான தருணங்களில் நாமே மனதளர்ந்து பின்வாங்கினால், இந்த நாட்டின் மீது தொடர்ந்து நம்பிக்கை வைக்குமாறு மக்களிடம் நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?”தனது போராட்டம் கோபத்தினால் உந்தப்பட்டது அல்ல என்பதை சையட் சாடிக் வலியுறுத்தினார்.
“நான் யாரையும் வெறுத்ததால் போராடவில்லை. மலேசியாவை நான் மிகவும் நேசிப்பதாலேயே போராடினேன். இந்தப் பயணம் எனது நேரம், நற்பெயர் மற்றும் எதிர்காலம் எனப் பலவற்றையும் என்னிடமிருந்து பறிக்க முயன்றது. ஆனால், மலேசியாவின் மீதான எனது நம்பிக்கையை அது ஒருபோதும் பறிக்கவில்லை.”
அதிகாரமும் பதவியும் நிலையற்றவை, ஆனால் கொள்கைகள், கண்ணியம் மற்றும் சேவை ஆகியவை நிலைத்திருப்பவை என்று முன்னாள் முவார் நாடாளுமன்ற உறுப்பினரான அவர் கூறினார். பழிவாங்கும் எண்ணத்தை நிராகரித்த அவர், கசப்புணர்வுடன் அல்லாமல் பொறுப்புணர்வுடனேயே நீதிமன்றத் திலிருந்து வெளியேறுவதாகத் தெரிவித்தார்.
ஆறு ஆண்டுகால சட்டப் போராட்டத்தின்போது தனக்குத் துணையாக நின்ற பெற்றோர், வருங்கால மனைவி, குடும்பத்தினர், சட்டக் குழுவினர், நண்பர்கள், முவார் தொகுதி மக்கள் மற்றும் மலேசிய மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். தீர்ப்புக்குப் பிறகு, அவர் நேராக நாடாளுமன்றத்திற்குச் செல்வதாகக் குறிப்பிட்டார்.




