இந்தோனேசியாவைச் சேர்ந்த ‘eFishery’ எனும் மீன்வளர்ப்புத் துறை சார்ந்த புதிய நிறுவனத்தில் (start-up) சுமார் 200 மில்லியன் ரிங்கிட் முதலீடு செய்யுமாறு ‘Retirement Fund Inc’ (KWAP) ஏமாற்றப் பட்டதாகவும், இது ஒரு திட்டமிட்ட மோசடி என்றும் நிதியமைச்சர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
KWAP நிறுவனம் வலுவான மற்றும் வெளிப்படையான முதலீட்டு நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது என்றும், அதில் அனைத்து முதலீடுகளும் ஒப்புதல் அளிக்கப்படுவதற்கு முன்னதாக முறையான மற்றும் விரிவான ஆய்வுக்கு (due diligence) உட்படுத்தப்படுகின்றன என்றும் அன்வார் கூறினார்.
“வழங்கப்பட்ட தகவல்கள்—அதாவது உள்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட தணிக்கையாளர்களால் உறுதிப்படுத்தப்பட்ட நிதிநிலை அறிக்கைகள் உட்பட—அடிப்படையிலான மதிப்பீட்டு நடைமுறைகளுக்குப் பின்னரே eFishery-யிலான முதலீடு குறித்த முடிவு எடுக்கப்பட்டது.
“KWAP-ஐ உள்ளடக்கிய முதலீட்டாளர் களின் கூட்டமைப்பானது, வழங்கப்பட்ட தகவல்கள் முழுமையானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த ஒரு சுயாதீனமான ஆய்வு நடவடிக்கையையும் மேற்கொண்டது.
“இருப்பினும், eFishery நிர்வாகம் அந்நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கைகளைத் தந்திரமாக மாற்றியமைத்திருந்ததால், இந்த முதலீடு ஒரு திட்டமிட்ட மோசடியாக அமைந்தது,” என்று அவர் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரின் Temasek Holdings Pte Ltd மற்றும் Northstar Group, அத்துடன் ஜப்பானின் Softbank Group உள்ளிட்ட பிற அனைத்துலக நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்நுட்ப முதலீட்டு நிதிகளும் இந்த முயற்சியால் இழப்புகளைச் சந்தித்தன என்று பிரதமர் மேலும் தெரிவித்தார்.




