ஒழுக்கம் மற்றும் தொழில்முறை அணுகுமுறை யைக் கடைப்பிடிப்பதற்கான ஒரு நினைவூட்டலே தவிர, யாரையும் பதவி விலகுமாறு விடுக்கப்பட்ட உத்தரவு அல்ல என்று டத்தோ ஸ்ரீ பஹ்மி ஃபட்சில் கூறினார்.
மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட்டாட்சி ஒற்றுமை அரசாங்கத்திற்குள் ஒற்றுமையைப் பேணுவதையே அந்தச் செய்தி நோக்கமாகக் கொண்டிருந்தது என்று வலியுறுத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர், அன்வார் எந்தவொரு கட்டளையையும் பிறப்பிக்கவில்லை என்று தெரிவித்தார்.
“இதுவரை பிரதமரிடமிருந்து எந்த உத்தரவும் வரவில்லை. ஒற்றுமை அரசாங்கத்தில் பணியாற்றும் அனைவரும் ஒற்றுமை உணர்வைப் பேண வேண்டும் என்பதற்கான ஒரு நினைவூட்டல் மட்டுமே அது,” என்று நேற்று இங்குள்ள ஃபெல்டா பாலோங் 2-இல் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் கூறினார்.
அன்வாரின் எச்சரிக்கை ஒழுக்கம் குறித்த நினைவூட்டலே தவிர, பதவி விலகுவதற்கான உத்தரவல்ல:-பஹ்மி: பிரச்சாரம் மேற்கொள்ளும்போது அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் மற்றும் கூட்டாட்சிப் பதவிகளை வகிப்பவர்கள் ஒழுக்கத்துடனும் தொழில்முறை கண்ணியத்துடனும் நடந்துகொள்ளுமாறு அன்வார் வலியுறுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.
“ஜனநாயகச் செயல்முறை என்பது இயல்பாகவே கருத்து வேறுபாடு களையும் மாறுபட்ட கண்ணோட்டங் களையும் அனுமதிக்கக்கூடிய ஒன்று என்று பிரதமர் கருதுகிறார். “முந்தைய மாநிலத் தேர்தல்களிலும் கூட கட்சிகள் தனித்தனியாகப் போட்டி யிட்டன; ஆனால், ஒற்றுமை அரசாங்க த்தில் பதவிகளை வகிப்பவர்கள் தொடர்ந்து ஒருவரையொருவர் மதிக்க வேண்டும் என்பதையே அவர் வலியுறுத்தினார். அது முக்கியமானது,” என்று அவர் கூறினார்.
தேர்தல் பிரச்சாரங்களின் போது கூட்டாட்சித் தலைவர்களின் நடத்தை முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பாதிக்கக்கூடும் என்பதையும் பிரதமர் கவனத்தில் கொண்டுள்ளார் என்று ஃபஹ்மி மேலும் கூறினார்.




