சுபாங் நாடாளுமன்றத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து PKR கட்சியைச் சேர்ந்த வோங் சென் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாது என தேர்தல் ஆணையம் (EC) உறுதி செய்துள்ளது. ஒரு அறிக்கையில், தேர்தல் ஆணையத் தலைவர் ரம்லான் ஹருன், அந்த இடத்தின் காலியிடம் குறித்து டேவான் ரக்யாட் சபாநாயகர் ஜோஹரி அப்துல் நேற்று ஆணையத்திற்குத் தெரிவித்ததாகக் கூறினார்.
“கூட்டாட்சி அரசியலமைப்பின் பிரிவு 54(1)-ன் அடிப்படையில், அந்த இடைக்கால வெற்றிடத்தை நிரப்ப வேண்டிய அவசியமில்லை என்று மக்களவை (Dewan Rakyat) சபாநாயகர் தேர்தல் ஆணையத்திற்குத் (EC) தெரிவித்துள்ளார்.“அதன்படி, P.104 சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் எதுவும் நடத்தப்படாது,” என்று அது கூறியது.
மே 2018 முதல் சுபாங் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வந்த வோங், கடந்த புதன்கிழமையன்று சபாநாயகர் ஜோஹாரியிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியதாகக் கூறி, நேற்று தனது ராஜினாமாவை அறிவித்தார்.
அந்த வெற்றிடத்திற்கான ஏற்பாடுகளைச் செய்ய நாடாளுமன்ற அதிகாரிகளுக்கு மூன்று பணி நாட்கள் அவகாசம் அளிக்கும் நோக்கிலேயே தனது ராஜினாமா நேரம் திட்டமிடப்பட்டதாக அவர் கூறினார்.
2013 முதல் 2018 வரை கெலானா ஜெயா தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்திய வோங், நேற்று வரை தனது ராஜினாமா குறித்த விவரங்களை வெளியிட வேண்டாம் என்று தானும் ஜோஹாரியும் ஒப்புக்கொண்டிருந்ததாகத் தெரிவித் தார்.
தொகுதி சார்ந்த சிறப்பு ஒதுக்கீடுகளை நிர்வகிக்கும் ‘MyKhas’ இணைய தளத்தைப் பயன்படுத்துவதிலிருந்து சமீபத்தில் தடை செய்யப்பட்ட மூன்று PKR நாடாளுமன்ற உறுப்பினர்களில் வோங் ஒருவராவார்.
மற்ற இருவரும் அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் மற்றும் பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லீ சியான் சுங் ஆகியோர் ஆவர்.




