கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (KLIA), குழந்தைகளின் பொம்மைப் பெட்டிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.01 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 12.675 கிலோ கஞ்சா மலர்களைக் கடத்தும் முயற்சியை சுங்கத் துறை அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.
ஜூலை 13 அன்று KLIA அஞ்சல் மற்றும் கூரியர் மையத்தில், KLIA சுங்கத் துறையின் அமலாக்கப் பிரிவினரால் இந்தச் சரக்குகள் கைப்பற்றப்பட்டன.
இந்த நடவடிக்கையின் போது நான்கு பெட்டிகள் கைப்பற்றப்பட்டதாக KLIA சுங்கத்துறை இயக்குனர் அஸ்பலிலா ஏஜி துவா தெரிவித்தார்.
“சோதனையின்போது, குழந்தைகளின் பொம்மைப் பெட்டிகளுக்குள் 1.01 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 12.675 கிலோ கஞ்சா மலர்கள், காற்று புகாத வெளிப்படையான பிளாஸ்டிக் பைகளில் அடைத்து மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது,” என்று வியாழக் கிழமை (ஆகஸ்ட் 13) KLIA சரக்கு சுங்க வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
சரக்கு சேவை (cargo service) மூலம் ஐரோப்பிய நாட்டிற்கு ஏற்றுமதி செய்வ தற்காகவே இந்தப் பொட்டலங்கள் அனுப்பப்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
“பெட்டிகளில் குறிப்பிடப்பட்டிருந்த தொலை பேசி எண்ணைத் தொடர்பு கொள்ள முடியவில்லை; அதே வேளையில், அனுப்புநர் மற்றும் பெறுநரின் முகவரிகளும் போலியானவை என்பது சோதனையில் தெரியவந்தது,” என்று அவர் கூறினார்.
போதைப்பொருட்களின் ஆதாரம் மற்றும் இதில் தொடர்புடைய நபர்களைக் கண்டறியும் பணிகள் நடைபெற்று வருவதாக அஸ்பலிலா தெரிவித்தார்




