Vimarsagan Media

Home » Malaysia » சிலாங்கூர் சட்டமன்றத் தொகுதிகள் எதையும் காலியாக அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை:-சபாநாயகர்

சிலாங்கூர் சட்டமன்றத் தொகுதிகள் எதையும் காலியாக அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை:-சபாநாயகர்

சிலாங்கூர் சட்டமன்றத் தொகுதிகள் எதையும் காலியாக அறிவிக்க வேண்டிய அவசியம் தற்போது இல்லை என்று மாநில சட்டமன்ற சபாநாயகர் லாவ் வெங் சான் தெரிவித்துள்ளார்.

ஒரு சட்டமன்ற உறுப்பினர் தனது பதவியில் நீடிப்பதற்கான தகுதியை இழந்திருக்கலாம் என்று தனக்குத் தகவல் கிடைத்ததாகவும், ஆனால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் திங்கட்கிழமை நிலவரப்படி அத்தகைய சிக்கல் எதுவும் எழவில்லை என்பது தெரியவந்ததாகவும் லாவ் கூறியதாக ‘பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

“எனவே, எந்தவொரு சட்டமன்ற உறுப்பினர் குறித்தும் நான் எந்த அறிவிப்பையும் வெளியிட வேண்டிய அவசியமில்லை,” என்று இன்று சிலாங்கூர் சட்டமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

“சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இது விரிவானதாகவும், அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி யதாகவும், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் சம்பந்தப் படுத்தியதாகவும் இருந்தது.”

அடையாளம் தெரியாத சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் திவாலானவராக அறிவிக்கப்பட்டதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, சிலாங்கூரில் இடைத்தேர்தல் நடைபெறலாம் என்ற ஊகங்கள் எழுந்தன.

சிலாங்கூர் அரசியலமைப்பின் பிரிவு 70(1)(b)-இன் கீழ், திவாலானவர் என்று அறிவிக்கப்பட்டு அதிலிருந்து இன்னும் விடுவிக்கப்படாத ஒருவர் (undischarged bankrupt), சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினராக இருப்பதற்கான தகுதியை இழக்கிறார்.

இருப்பினும், ஷா ஆலம் உயர் நீதிமன்றம் அந்தச் சட்டமன்ற உறுப்பினருக்கு எதிரான திவால் உத்தரவை ரத்து செய்ததன் மூலம் இன்று இச்சிக்கல் தீர்க்கப்பட்டது.

Scroll to Top