கோம்பாக் (Gombak) எல்ஆர்டி (LRT) நிலையத்தில் நேற்று காலை பயணி ஒருவர் மயங்கி ரயில் தண்டவாளத்தில் விழுந்ததாக ‘ராபிட் கேஎல்’ (Rapid KL) தெரிவித்துள்ளது.
காலை 9.05 மணிக்கு நிகழ்ந்த இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு நடவடிக்கையாக ‘மேடைக்குள் நுழைவதைத் தடுக்கும் அவசர நிறுத்த அமைப்பு’ செயல்படுத்தப்பட்டதாகவும், தண்டவாளங்களுக்கான மின்சாரம் தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டதாகவும் ரயில் சேவை நிறுவனம் கூறியது.
செயல்பாட்டுக் குழுவினரும் துணைப் போலீசாரும் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அந்தப் பயணியை தண்டவாளப் பகுதியிலிருந்து மீட்டு, அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் சென்றனர்; அதேவேளையில் ஆம்புலன்ஸ் வாகனமும் வரவழைக்கப்பட்டது.
“பின்னர், மேல் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக அப்பயணி கோலாலம் பூரில் உள்ள தவக்கல் சிறப்பு மருத்துவமனைக்கு (Tawakkal Specialist Hospital) அழைத்துச் செல்லப்பட்டார்,” என்று அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்டவாளங்கள் பாதுகாப்பானவை என உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காலை 9.12 மணிக்கு ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கின.
இன்று காலை கெலானா ஜெயா (Kelana Jaya) எல்ஆர்டி வழித்தடத்தில் ஏற்பட்ட மின்சாரத் தடை காரணமாக, தாமான் ஜெயா (Taman Jaya) மற்றும் யுனிவர்சிட்டி (Universiti) நிலையங்களுக்கு இடையே ஒரு ரயில் பாதியிலேயே நின்றது. இச்சம்பவம் குறித்து ரயில் சேவை நிறுவனம் விசாரணை நடத்தி வருகிறது.




