மலேசியாவிற்குள் சுமார் 12.26 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 205 கிலோவிற்கும் அதிகமான ‘ஸ்யாபு’ (syabu) போதைப்பொருளைக் கடத்த முயன்ற கும்பலின் முயற்சியைத் தாய்லாந்து அதிகாரிகள் முறியடித்து ள்ளனர்.
வெள்ளிக்கிழமையன்று ஹாட்யாய் (Hatyai) பகுதியில் போலீசார் நடத்திய தொடர் சோதனைகளில், அக்கும்பலைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்ட னர்; இவர்கள் அனைவரும் தாய்லாந்து நாட்டவர்கள் என்று ‘கோஸ்மோ’ (Kosmo) செய்தி வெளியிட்டுள்ளது.
இக்கும்பல் கூரியர் சேவை (courier service) மூலம் போதைப்பொருளைக் கடத்த முயன்றதாக நம்பப்படுகிறது.
கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படை யில், காலை 9.30 மணியளவில் முதல் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்; அவரிடம் பல பொட்டலங்களில் ‘ஸ்யாபு’ போதைப்பொருள் இருந்தது கண்டறியப் பட்டது.
தொடர்ந்து குவான் லாங் (Khuan Lang) துணை மாவட்டத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில், அவரது நண்பர்கள் இருவர் அவர்களது வீடுகளில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
“முதல் சந்தேக நபர் அந்த இரண்டு சந்தேக நபர்களிடமும் போதைப் பொருளை ஒப்படைக்கும் பணியைச் செய்யவிருந்தார்,” என்று தாய்லாந்து போலீஸ் செய்தித் தொடர்பாளர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மூவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமையன்று 62 வயதுடைய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டார். இப்பொருள் கிளாந்தான் மாநிலத்தின் பெங்கலான் குபோர் (Pengkalan Kubor) வழியாக மலேசியாவிற்குள் கடத்தப்படவிருந்தது.




