ஜாலூர் கெமிலாங்’ (மலேசியத் தேசியக் கொடி) தலைகீழாக வைக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜொகூர் துணை காவல் ஆணையர் ஹூ சுவான் ஹுவாட் தெரிவித்தார்.
இஸ்கந்தர் புத்ரி, குலாய் மற்றும் ஜொகூர் பாரு ஆகிய இடங்களில் இருந்து இது தொடர்பான மூன்று புகார்கள் இதுவரை காவல்துறையிடம் வந்துள்ளதாக அவர் கூறினார்.
“கூலாய் மற்றும் ஜொகூர் பாரு தெற்கு ஆகிய இடங்களில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக தலா இருவர் கைது செய்யப் பட்டுள்ளனர். “அதேவேளையில், இஸ்கந்தர் புத்ரியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்,” என்று கூறிய அவர், கைது செய்யப்பட்ட வர்களின் வயது 25 முதல் 56-க்குள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
தேசியக் கொடியை காட்சிப்படுத்தும் போது பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களைப் பணியமர்த்தி யுள்ளவர்கள் கவனமாக இருக்குமாறு துணை காவல் ஆணையர் ஹூ கேட்டுக்கொண்டார்.
“நாட்டின் மீதான அன்பை வெளிப்படுத்த பலர் விரும்புவது நல்ல விஷயம்; ஆனால், தேசியக் கொடி சரியாகக் காட்சிப்படுத்தப்படுவதை உறுதி செய்வதில் அவர்கள் விழிப்புடன் இருப்பது அவசியம்.
“வெளிநாட்டு ஊழியர்களைக் கொண்ட வணிக உரிமையாளர்கள், கொடியை எவ்வாறு சரியாகக் காட்சிப்படுத்துவது என்பதை அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்; அல்லது குறைந்தபட்சம், சரிபார்ப்பதற்காக உள்ளூர் மேற்பார்வையாளருக்கு அந்தக் கொடியின் புகைப்படத்தை அனுப்பும்படி அவர்களை அறிவுறுத்த வேண்டும்,” என்று அவர் கூறினார்.
முன்னதாக, ‘ஜாலூர் கெமிலாங்’ கொடியைத் தலைகீழாகப் பறக்கவிட்டது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு உற்பத்தி நிறுவனம் உடனடியாகத் தனது செயல்பாடுகளை நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டதாகத் தகவல் வெளியானது.




