Vimarsagan Media

Home » Malaysia » முன்னாள் தபுங் ஹாஜி தலைமை நிர்வாக அதிகாரிக்கு 7 நாட்கள் காவலில் வைக்க உத்தரவு

முன்னாள் தபுங் ஹாஜி தலைமை நிர்வாக அதிகாரிக்கு 7 நாட்கள் காவலில் வைக்க உத்தரவு

புனிதப் பயணிகளுக்கான நிதியகமான ‘தபுங் ஹாஜி’ (Tabung Haji) தொடர்பான அரச விசாரணை ஆணையத்தின் (RCI) அறிக்கை தொடர்பாக, அதன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஒருவரை ஏழு நாட்கள் காவலில் வைக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) உத்தரவு பெற்றுள்ளது.

60 வயது மதிக்கத்தக்க அந்த நபர், ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஆரஞ்சு நிறக் கைதி உடையை அணிந்தவாறு, ஆணைய அதிகாரிகளின் பாதுகாப் போடு காலை 9.38 மணிக்கு புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

சந்தேக நபர் ஆகஸ்ட் 27 வரை காவலில் வைக்கப்பட நீதிமன்றம் அனுமதித்ததாக ‘பெரிதா ஹாரியன்’ (Berita Harian) செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டின் பல முன்னணி நிறுவனங்களில் பதவிகளை வகித்த ஒரு பிரபலமான பெருநிறுவனப் பிரமுகர் இவர் என்று MACC வட்டாரம் ஒன்று தெரிவித்தது.

பொதுவெளியில் வெளியிடப்பட்ட RCI அறிக்கை தொடர்பான விசாரணையில் உதவுவதற்காக, தபுங் ஹாஜியின் நான்கு முன்னாள் மூத்த நிர்வாக உறுப்பினர்கள் உட்பட ஏழு பேரை MACC ஏற்கனவே கைது செய்திருந்தது.

2014 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் அந்த நிறுவனத்தின் நிர்வாகம், செயல்பாடுகள் மற்றும் சொத்துக்கள் குறித்து இந்த RCI விசாரணை நடத்தியது.

தபுங் ஹாஜியின் நிதி நிலைமை குறித்த உண்மையான நிலையை மறைத்தது, சிக்கலான முதலீடுகளால் ஏற்பட்ட இழப்புகளைப் பதிவு செய்யாதது மற்றும் வருடாந்திர லாபப் பகிர்வை நியாயப்படுத்த “கற்பனைத் திறன் சார்ந்த கணக்கியல்” (creative accounting) முறையைப் பயன்படுத்தியது ஆகியவை அதன் முக்கியக் கண்டுபிடிப்புகளில் அடங்கும்.

வாரிய நியமனங்களில் அரசியல் தலையீடு, நிலையற்ற ‘ஹிபா’ (hibah – இலாபப் பங்கு) கொடுப்பனவுகள் மற்றும் வைப்பாளர்களின் நம்பிக்கையைப் பாதிக்கும் என்ற கவலையால் தேசிய தணிக்கைத் துறை தனது கண்டுபிடிப்பு களின் தீவிரத்தைக் குறைத்தது ஆகியவை தபுங் ஹாஜியின் நிதிச் சிக்கல்களுக்கான காரணங்கள் என்றும் ஆணையம் கண்டறிந்தது.

Scroll to Top