பெட்டாலிங் ஜெயா: நான்கு ஆண்டு களுக்கு முன்பு 226.5 கிலோ கஞ்சாவைக் கடத்திய குற்றத்திற்காக ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோலாலம் பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது; அதேவேளையில், அவர் மீதான அதே குற்றச்சாட்டு களிலிருந்து அவரது மனைவி விடுவிக்கப்பட்டுள்ளார்.
தற்காப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், போதைப்பொருள் கடத்தல் தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகளில் ஃபாலிக் அமர் அப்துல் ரஹீம் (31) குற்றவாளி என்று நீதிபதி நூர் ருவேனா நூர் தின் தீர்ப்பளித்தார். “1952-ஆம் ஆண்டின் அபாயகரமான போதைப் பொருள் சட்டத்தின் பிரிவு 39B(1)(a)-இன் கீழ் உள்ள குற்றச்சாட்டுகளில், முதல் குற்றவாளி குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
“அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது; இத்தண்டனை அவர் கைது செய்யப்பட்ட நாளான 2022 பிப்ரவரி 16 முதல் அமலுக்கு வருகிறது. மேலும், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 12 பிரம்படி வீதம், மொத்தம் 24 பிரம்படிகள் அவருக்கு விதிக்கப் பட்டுள்ளன,” என்று நீதிபதி கூறினார்.
இந்த மாதத் தொடக்கத்தில் வழங்கப்பட்ட விரிவான தீர்ப்பில், அரசுத் தரப்பு சாட்சியங்கள் அவருக்கு எதிராக ‘முதல் பார்வையில் நம்பத்தகுந்த வழக்கினை’ (prima facie case) நிறுவத் தவறியதைக் கண்டறிந்த நீதிபதி, முதல் குற்றச்சாட் டிலிருந்து ஃபாலிக்கின் மனைவி நோர்சஃபிகா நஸ்வா நூரிசான் (33) அவர்களை விடுவித்தார்.
தற்காப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், போதைப்பொருட்கள் மீது அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும், அவர் போதைப்பொருள் கடத்துபவராக இல்லாமல், அவற்றைப் பற்றி அறிந்திருந்த ஒரு செயலற்ற பங்கேற்பாளராக மட்டுமே இருந்தார் என்றும் கண்டறிந்து, இரண்டாவது குற்றச்சாட்டிலிருந்தும் நோர்சஃபிகாவை நீதிமன்றம் விடுவித்தது
செந்தூல் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் 9.5 கிலோ கஞ்சாவைக் கடத்தியதாக முதல் குற்றச்சாட்டின் கீழும், அதே பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மேலும் 217 கிலோ கஞ்சாவை வைத்திருந்ததாக இரண்டாவது குற்றச்சாட்டின் கீழும் ஃபாலிக் மற்றும் நோர்சஃபிகா ஆகியோர் மீது கூட்டாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இக்குற்றங்கள் 2022 பிப்ரவரி 16 அன்று இரவு 7.50 மணிக்கும் 8.25 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் நிகழ்ந்தன




