சிரம்பானில் உள்ள கார்டன் ஹோம்ஸ் (G பகுதியில் நேற்று காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட நபர், நீண்ட காலமாக போதைப்பொருள் தயாரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த ஒரு போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் என்று புக்கிட் அமான் (Bukit Aman) தெரிவித்துள்ளது.
பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் ஒரு வீட்டில் நடத்தப்பட்ட சோதனை யின்போது, அந்த நபர் காவல்துறை அதிகாரிகளை நோக்கி பலமுறை துப்பாக்கியால் சுட்டதாகவும், அதற்குப் பதிலடியாக காவல்துறையினரும் சுட்டதாகவும் புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குனர் உசேன் உமர் கான் தெரிவித்தார்.
சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட அந்த 52 வயது நபர், 1990-களிலிருந்தே போதைப்பொருள் தயாரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்ததாக அவர் கூறினார்.
கடத்தல் உள்ளிட்ட போதைப்பொருள் மற்றும் பிற குற்றச் செயல்கள் தொடர்பான குற்றப் பின்னணி அவருக்கு இருந்ததும் கண்டறியப்பட்டது.




