கெடாவில் உள்ள நெல் விவசாயி களுக்கு ‘பாஜா 3’ எனப்படும் கூட்டு உரத்தை விநியோகிப்பதில் ஏற்பட்ட தாமதம் தொடர்பாக, உர விநியோக நிறுவனம் ஒன்றின் நிர்வாக இயக்குநரை நான்கு நாட்கள் காவலில் வைக்க MACC உத்தரவு பெற்றுள்ளது.
இன்று காலை அலோர் செட்டார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் MACC மனு தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, மாஜிஸ்திரேட் எலியானா இஸ்மாயில் இன்று முதல் செப்டம்பர் 16 வரை அவரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.
வெளியிடப்பட்ட அறிக்கையில், 30-களின் வயதில் உள்ள அந்த நபர், நேற்று மதியம் 2.30 மணியளவில் அலோர் செட்டாரில் உள்ள கெடா MACC தலைமையகத்தில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பிறகு கைது செய்யப்பட்டதாக MACC கூறியது.
கெடா MACC தலைவர் நஸ்லி ரஷித் சுலோங் இந்தக் கைது நடவடிக்கையை உறுதிப்படுத்தியதுடன், 2009-ஆம் ஆண்டு MACC சட்டத்தின் பிரிவு 18-ன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக வும் தெரிவித்தார்.
உர விநியோகத்தில் ஏற்பட்ட தாமதம் குறித்து கெடா MACC விசாரணை தொடங்கியுள்ளதாக செப்டம்பர் 7-ஆம் தேதி தகவல் வெளியானது.
முடா விவசாய மேம்பாட்டு ஆணையத்தின் (MADA) கீழ் உள்ள 1,00,000 ஹெக்டேர் பரப்பளவிலான பகுதியில் உர விநியோகத்தைப் பாதிக்கும் தாமதங்கள் குறித்து, ஆகஸ்ட் 26 அன்று மலேசிய நெல் விவசாயிகள் சகோதரத்துவ அமைப்பு (PeSawah) அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
உர விநியோகத்தில் ஏற்பட்ட தாமதங்கள் தொடர்பாக விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் அமைச்சகத்தின் தலைமைச் செயலாளர் ஆகியோரை விசாரணைக்கு அழைக்கக்கூடும் என்று MACC தலைமை ஆணையர் அப்துல் ஹலீம் அமன் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.




