இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான பிரதமர் அன்வார் இப்ராஹிமின் சமீபத்திய சந்திப்பைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய மதபோதகர் ஷாகிர் நாயக்கை நாடு கடத்துவது தொடர்பாக இந்தியாவிடம் ஏதேனும் அரசியல் ரீதியான உறுதிமொழி அளிக்கப்பட்டதா என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்று பாஸ் (PAS) கட்சி வலியுறுத்தியுள்ளது.
வர்த்தகம், முதலீடு, கல்வி, தொழில்நுட்பம் மற்றும் பிற முக்கியத் துறைகளில் இந்தியாவுடன் மலேசியா கொண்டுள்ள நீண்டகால உறவுகள், நாடு கடத்துதல் தொடர்பான மலேசியச் சட்டங்களுக்கு மேலானதாக இருக்கக்கூடாது என்று பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தகியுத்தீன் ஹசான் கூறினார்.
“அரசியல் பேரங்கள் அல்லது சமரசங்கள் மூலம் அல்லாமல், சட்ட நடைமுறை களுக்கு இணங்க, வெளிநாட்டிலிருந்து வரும் நியாயமான நாடு கடத்தல் கோரிக்கைக்கு மலேசியா உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும்,” என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு சார்ந்தது மட்டுமல்ல; இராஜதந்திர அழுத்தம் அல்லது சாத்தியமான ஆதாயங்களை எதிர்கொள்ளும்போது, மலேசியா தனது சொந்த சட்டக் கோட்பாடுகளையும் விதிகளையும் நிலைநிறுத்துமா என்பதற்கான ஒரு சோதனையாகவும் இது அமைகிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.




