கெடாவில் உள்ள நெல் விவசாயி களுக்கு உர விநியோகம் செய்வதில் ஏற்பட்ட தாமதம் தொடர்பாக நான்கு நாட்கள் காவலில் வைக்கப்பட்டிருந்த உர விநியோக நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஒருவர், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
30 வயது மதிக்கத்தக்க அந்த நபர், அவரது காவல் காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து நேற்று விடுவிக்கப்பட்டதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
அவர் ஒவ்வொரு மாதமும் கெடா மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்றும், தேவைப்பட்டால் விசாரணைக்கு நேரில் வர வேண்டும் என்றும் அந்த வட்டாரங்கள் கூறின.இது குறித்து கெடா MACC இயக்குனர் நஸ்லி ரஷித் சுலோங் இத்தகவலை உறுதிப்படுத்தினார்.
உர விநியோகத்தில் ஏற்பட்ட தாமதம் குறித்து கெடா மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய விசாரணை தொடங்கி யுள்ளதாக செப்டம்பர் 7 அன்று செய்தி வெளியானது.
மூடா விவசாய மேம்பாட்டு ஆணையத்தின் (Muda Agricultural Development Authority) கீழ் உள்ள 1,00,000 ஹெக்டேர் பரப்பளவிலான பகுதிக்கு உர விநியோகத்தில் ஏற்பட்ட தாமதம் குறித்து, ஆகஸ்ட் 26 அன்று ‘Pertubuhan Persaudaraan Pesawah Malaysia’ (மலேசிய நெல் விவசாயிகள் சகோதரத்துவ அமைப்பு) அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது.




