தேசிய ஜூனியர் இரட்டையர் பிரிவு பயிற்சியாளரான பாங் சே சாங் (Pang Cheh Chang), மயங்கி விழும் நிலையில் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை (செப்டம்பர் 17) வீடு திரும்பினார்.
அலோர் செட்டாரில் உள்ள சுல்தானா பஹியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சே சாங், தற்போது சீரான உடல்நிலையுடன் இருப்பதாக மலேசிய பூப்பந்து சங்கத்தின் துணைத் தலைவர் டத்தோ வி. சுப்பிரமணியம் உறுதிப்படுத்தினார்.
புதன்கிழமை (செப்டம்பர் 16) கெடா பூப்பந்து சங்க அரங்கில் நடைபெற்ற தேசிய 18-வயதுக்குட்பட்டோருக்கான சாம்பியன்ஷிப் போட்டியில், வோங் ட்சே ஹான்-டியோ சோங் யீ ஜோடி ஜேசன் அஃபண்டி வோங்-லம் சீ கியான் ஜோடியை எதிர்த்து விளையாடியதைக் கவனித்துக் கொண்டிருந்தபோது, 52 வயதான பயிற்சியாளர் திடீரென பலவீனமடைந்து மயங்கி விழும் நிலைக்குச் சென்றார்.
“நேற்று, அவர் ஆடுகளத்தில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அங்கு இருந்த மருத்துவக் குழுவினர் உடனடியாக அவரை சுல்தானா பஹியா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
“அவர் மயங்கி விழுந்தபோது பேசுவதில் சிரமம் இருந்தது, ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவரால் பேச முடிந்தது. “அவரது உடல்நிலை சீராக்கப்பட்டது, அவர் மருத்துவமனையில் தங்கவைக்கப் பட்டார். இன்று காலை எனக்குக் கிடைத்த தகவலின்படி, அவர் ஏற்கனவே மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிவிட்டார்,” என்று சுப்பிரமணியம் கூறினார்.
இருப்பினும், சுப்பிரமணியம் இன்னும் சே சாங்கை நேரில் கண்டு பேசவில்லை; மருத்துவமனையின் மருத்துவப் பரிசோதனை முடிவுகள் என்ன என்பதை அறிய அவர் காத்திருப்பதாக கூறினார்.




