Vimarsagan Media

Home » Malaysia » ருக்குன் நெகாரா தேசிய ஒற்றுமைக்கு ஒரு அடிப்படைத் தூணாகத் திகழ்கிறது மலேசியர்கள் புரிந்துகொள்ள வேண்டும்

ருக்குன் நெகாரா தேசிய ஒற்றுமைக்கு ஒரு அடிப்படைத் தூணாகத் திகழ்கிறது மலேசியர்கள் புரிந்துகொள்ள வேண்டும்

தேசியக் கொள்கைகள் (ருக்குன் நெகாரா), தேசிய ஒற்றுமையின் ஒரு அடிப்படைத் தூணாகத் திகழ்கிறது என்றும் அதனை அனைத்து மலேசியர்களும் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தேசிய ஒற்றுமைக்கான துணை அமைச்சர் ஆர். யூனேஸ்வரன் கூறினார்.

தேசிய சித்தாந்தம் பள்ளிகளில் கற்பிக்கப்பட்டாலும், ஒற்றுமையையும் தேசிய அடையாளத்தையும் வலுப்படுத்த, அதன் கொள்கைகளைப் பற்றி தங்கள் குழந்தைகளுக்குக் கற்பிப்பதிலும் நினைவூட்டுவதிலும் பெற்றோர்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.

“நமது பள்ளிப் பருவத்திலிருந்தே ‘ருக்குன் நெகாரா’ பற்றி நமக்குக் கற்பிக்கப்பட்டு, மனப்பாடம் செய்யப்பட்டுள்ளது. இன்னும் யாருக்காவது அது புரியவில்லை என்றால், அவர்கள் மலேசியாவின் உண்மையான உணர்வைப் போற்றத் தவறிவிட்டார்கள் என்று நான் நம்புகிறேன்.

“ருக்குன் நெகாராவின் ஐந்து கொள்கைகளும் நமது சமூகத்தை ஒன்றிணைப்பதற்கான அடித்தளத்தை உருவாக்குகின்றன. அனைத்து அரசியல்வாதிகளும் ருக்குன் நெகாரா நிறுவப்பட்டதன் நோக்கத்தைக் கற்றுக்கொண்டு, புரிந்துகொண்டு, போற்ற வேண்டும்,” என்றார் யூனேஸ்வரன்.

வியாழக்கிழமை (ஜூன் 4) விஸ்மா பெர்னாமாவில், மலேசிய தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமாவின் தலைவர் வோங் சுன் வாயை மரியாதை நிமித்தமாகச் சந்தித்த பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

ஜூன் 1ஆம் தேதியன்று, மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், மலேசியர்கள் ‘ருக்கூன் நெகாரா’வின் உணர்வைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதன் கொள்கைகளுக்குக் கட்டுப்பட விரும்பாதவர்கள் மலேசியக் குடிமக்கள் என்று அழைக்கப்படுவதற்குத் தகுதியற்றவர்கள் என்றும் வலியுறுத்திக் கூறிய கருத்துகளுக்கு யுனேஸ்வரன் இவ்வாறு பதிலளித்தார்.

Scroll to Top