வடப்பகுதியில் ஏறக்குறைய 2.5 மில்லியன் ரிங்கிட் ($790,000) லஞ்ச மோசடியின் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் 13 பேரைக் கைதுசெய்துள்ளது.பிடிபட்டோரில் எட்டுப் பேர் அரசாங்க ஊழியர்கள். எஞ்சிய ஐவரில் குடிமக்களும் நிறுவன உரிமையாளர்களும் அடங்குவர்.
கையூட்டு, ஒப்பந்ததாரர்களிடமிருந்து பெறப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது. அமைப்பின் ஏலக்குத்தகைத் திட்டங்களுக்கு வணிகக் கூட்டமைப் பொன்றின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் நிறுவனங்களை நியமிப்பதற்கு அவர்கள் லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
பிடிபட்டவர்களில் 10 பேர் ஆண்கள், மூவர் பெண்கள். பேராக்கில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் அலுவலகத்திற்குத் திங்கட்கிழமை வாக்குமூலம் கொடுக்கச் சென்றபோது அவர்கள் கைதுசெய்யப்பட்டனர். ஆணையத்தின் உத்திபூர்வத் தொடர்புப் பிரிவு, புதன்கிழமை (ஜூன் 17) வெளியிட்ட அறிக்கையில் அந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
சந்தேக நபர்களில் அரசாங்க ஊழியர்கள் இருவரும் நிறுவன இயக்குநர் ஒருவரும் இரண்டு நாள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.எஞ்சிய 10 பேரும் இம்மாதம் 20ஆம் தேதிவரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பர்.
சந்தேக நபர்கள், 2024ஆம் ஆண்டிலிருந்து அண்மைக் காலம்வரை சதித்திட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக முதற்கட்டப் புலனாய்வில் தெரியவந்துள்ளது.
இடைத்தரகர்கள் மூலம் 10 முதல் 15 விழுக்காடு வரை கையூட்டு கொடுக்கவேண்டியிருந்ததாகக் கைதுசெய்யப்பட்ட ஒப்பந்ததாரர்கள் கூறினர். அந்தப் பணம், நிறுவன இயக்குநருக்கும் அரசாங்க அமைப்பின் முன்னாள் இயக்குநருக்கும் தரப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது. ஆணையம் அதனைத் தெரிவித்தது.




