Vimarsagan Media

Home » Malaysia » சமூக வருகைக்கான அனுமதிச் சீட்டுகளை தவறாகப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை சமீப காலம் அதிகரிப்பு

சமூக வருகைக்கான அனுமதிச் சீட்டுகளை தவறாகப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை சமீப காலம் அதிகரிப்பு

மலேசியாவில் சமூக வருகைக்கான அனுமதிச் சீட்டுகளை (social visit passes) தவறாகப் பயன்படுத்தி வேலை அல்லது பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை சமீப காலங்களில் அதிகரித்துள்ளதை குடிநுழைவுத் துறை கண்டறிந்துள்ளது.

2023-இல் 1,279 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 2024-இல் அந்த எண்ணிக்கை 2,644-ஆகவும், கடந்த ஆண்டில் 2,630-ஆகவும் உயர்ந்ததாக குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ சகாரியா ஷாபான் (Datuk Zakaria Shaaban) கூறியதாக ‘கோஸ்மோ! ஆன்லைன்’ செய்தி வெளியிட்டுள்ளது.

நடப்பாண்டு ஜூலை 15-ஆம் தேதி நிலவரப்படி 451 கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இவர்கள் சமூக வருகை அல்லது சுற்றுலாவுக்கான அனுமதிச் சீட்டுகளைப் பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைந்தனர்; ஆனால், தங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிச் சீட்டுகளின் நிபந்தனைகளை மீறி வேலை அல்லது பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

“இந்த வசதியைத் தவறாகப் பயன் படுத்துபவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம்; குடிநுழைவுச் சட்ட மீறல்கள் எதற்கும் நாங்கள் சமரசம் செய்துகொள்ள மாட்டோம்,” என்று சைபர்ஜாயாவில் (Cyberjaya) இன்று நடைபெற்ற 104-வது குடிவரவுத் துறை தினக் கொண்டாட்டத்தையொட்டி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

ஜூலை 15-ஆம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் 7,105 அமலாக்க நடவடிக்கை களைத் துறை மேற்கொண்டதாகவும், இதன் விளைவாகப் பல்வேறு குடிநுழைவு சட்ட மீறல்களுக்காக 41,596 வெளிநாட்டினர் தடுத்து வைக்கப் பட்டதாகவும் சகாரியா தெரிவித்தார்.

Scroll to Top