காவல் துறை நேர்மை மற்றும் தொழில்முறை அணுகுமுறைக்குத்தான் எல்லாவற்றிற்கும் மேலாக முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று டான் ஸ்ரீ அயோப் கான் மைதின் பிச்சை கூறினார்.
காவல் துறை துணைத் தலைவராகப் பணியாற்றிய கடைசி நாளில், “நேர்மை என்பது ஒரு நபரின் மிக மதிப்புமிக்க சொத்து” என்று அவர் உறுதியாகக் குறிப்பிட்டார்.
மூன்று தசாப்தங்களுக்கும் மேலான தனது பணிவாழ்வில் தனக்கு வழிகாட்டியாக அமைந்த தனக்குப் பிடித்தமான திரைப்படத்தின் வசனம் ஒன்றையும் அவர் மேற்கோள் காட்டினார்: “உங்கள் நற்பண்பை நீங்கள் இழந்துவிட்டால், எல்லாவற்றையும் இழந்துவிடுவீர்கள்.”
“நான் மிகவும் கடுமையானவன் என்றும், இராஜதந்திர அணுகுமுறை இல்லாத வன் என்றும் சிலர் கூறுகிறார்கள். “அது அவர்களின் கண்ணோட்டம். சிலர் என்னை விரும்புகிறார்கள், சிலர் விரும்புவதில்லை; ஆனால், சரியானது என்று நான் நம்புவதைச் செய்வதிலிருந்து விமர்சனங்கள் என்னைத் தடுத்திட நான் ஒருபோதும் அனுமதிக்கவில்லை,” என்று நேற்று நடைபெற்ற பொறுப்பு ஒப்படைப்பு விழாவில் அவர் பேசினார்.
குறிப்பாக ஊழல், அதிகார துஷ்பிர யோகம் மற்றும் திட்டமிட்ட குற்றங்களுக்கு எதிரான தனது இடை விடாத போராட்டத்தின் காரணமாக, தான் பெரும்பாலும் கண்டிப்பான மற்றும் சமரசமற்ற அதிகாரி என்று முத்திரை குத்தப்பட்டதை அயோப் கான் ஒப்புக்கொண்டார்.




