படிவம் 6 ‘ஃபார்ம் 6’ கல்வித் திட்டம் தொடர்ந்து கல்வி அமைச்சின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்; ஆனால் அது வழக்கமான இடைநிலைக் கல்வியிலிருந்து தனித்து இயங்கும் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.
கல்வி அமைச்சின் மாதாந்திரக் கூட்டத்தில் இன்று பேசிய அன்வார், ‘ஃபார்ம் 6’ மாணவர்கள் தங்களை பள்ளிப் படிப்பை முடித்த, ஆனால் பல்கலைக்கழகப் படிப்பைத் தொடங்கவிருக்கும் நிலையில் உள்ளவர்களாகக் (post-school, pre-university) கருத வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
“தற்போதைக்கு, பல்கலைக்கழகத்திற்கு முந்தைய கல்வித் திட்டமான ‘ஃபார்ம் 6’, கல்வி அமைச்சின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்று நான் முடிவு செய்துள்ளேன்.அவர்கள் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய நிலையில் இருந்தாலும், அவர்களை இடைநிலைக் கல்விக்குப் பிந்தைய நிலையில் உள்ளவர்களாகவே நாங்கள் அங்கீகரிக்கிறோம். இருப்பினும், தற்போதைய அமைப்பு, ஆசிரியர்கள் மற்றும் அது தொடர்பான பிற விஷயங்கள் காரணமாக, இத்திட்டம் தொடர்ந்து கல்வி அமைச்சிலேயே நிர்வகிக்கப்படும்,” என்று அவர் கூறினார்.
‘ஃபார்ம் 6’ திட்டம் ஒரு இடைநிலைப் பள்ளியின் வளாகத்திலேயே நடத்தப்பட்டாலும், அது தனிப்பட்ட கட்டிடப் பகுதியில் (block) அமைய வேண்டும் என்றும், பள்ளி முதல்வர்கள் அதனை ஒரு தனித் திட்டமாக நிர்வகிக்க வேண்டும் என்றும் அன்வார் கூறினார்.
உதாரணமாக, ‘ஃபார்ம் 5’ மற்றும் அதற்குக் கீழ் உள்ள வகுப்பு மாணவர்களிடமிருந்து தனித்து, ‘ஃபார்ம் 6’ மாணவர்களுக்கு எனத் தனிப்பட்ட காலைக் கூட்டங்கள் (assembly) நடத்தப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
“ஒரே வளாகத்தைப் பகிர்ந்து கொண்டாலும், இடைநிலைப் பள்ளியின் ஒரு பகுதியாகக் கருதப்படாமல், அவர்களுக்குத் தனிப்பட்ட அங்கீகாரம் கிடைக்க வேண்டும்,” என்று அவர் கூறினார் வரும் ஆண்டுகளில் இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அரசாங்கம் மீண்டும் மறுஆய்வு செய்யும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.




