ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வின்போது 13 செயல்பாட்டாளர் களைத் தவறாகக் கைது செய்ததற்காக, அவர்களுக்கு மொத்தம் RM195,000 இழப்பீடு வழங்குமாறு அரசாங்கத் திற்கும் காவல்துறைக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட செயல்பாட்டாளர்கள்: நூர் கியிரா இஸ்ஸாத் யுஸ்ரி, நளினா நாயர், எம். துளசி திவானி, லோ கார் முன், நூர் சுஹானா இஷாக், டாக்டர் சுபத்ரா ஜெயராஜ், தார்மலிங்கம் பிள்ளை, பி. இளைய பாரதி, அடி சம்சுதீன், தினேஷ் வெங்கடேசன், கைரி சுல்ஃபத்லி அபு பக்கர், வோங் யான் கே மற்றும் அஷ்ரஃப் ஷராஃபி அசார் ஆகியோர் ஆவர்.
நீதிபதி ஆனந்த் பொன்னுதுரை அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா RM15,000 இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். ஆகஸ்ட் 19, 2021 அன்று ‘டத்தாரன் மெர்டேகா’ (Dataran Merdeka) பகுதியில் கோவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர் களுக்காக நடத்தப்பட்ட மெழுகுவர்த்தி அஞ்சலி நிகழ்வின்போது கைது செய்யப்பட்டவர்களில் இவர்களும் அடங்குவர்.
தங்கள் அரசியலமைப்பு உரிமைகளை மீறியதற்காக, அந்த நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள், உள்துறை அமைச்சு மற்றும் அரசாங்கம் ஆகியவற்றின் மீது அவர்கள் வழக்குத் தொடர்ந்து இழப்பீடு கோரியிருந்தனர்.
செயல்பாட்டாளர்களைத் தவறாகக் கைது செய்ததற்கு காவல்துறை அதிகாரிகளும் அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும் என்று நீதிபதி ஆனந்த் தீர்ப்பளித்தார். காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே அவர்களின் அடையாள அட்டைகளைப் பறிமுதல் செய்ததாகவும், இதன் மூலம் மறைமுகமாக அவர்களின் சுதந்திரமும் உரிமைகளும் பறிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.




