இஸ்கந்தர் புத்ரி நகரில் உள்ள ஃபாரஸ்ட் சிட்டியிலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் காவல்துறை நடத்திய அதிரடிச் சோதனைகளில், 330க்கும் அதிகமா னோர் கைதுசெய்யப் பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் வெளி நாட்டினர். மோசடிகளுடன் தொடர்புடைய சட்டவிரோத அழைப்பு நிலையங்கள் இரண்டில் சம்பந்தப்பட்ட சந்தேகத்தில் அவர்கள் பிடிபட்டனர். பிடிபட்டோரில் 194 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ் சாட்டப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
முறையற்ற அழைப்பு நிலையங்களை ஒடுக்கும் நோக்கத்துடன் நாடு தழுவிய நிலையில் சோதனைகள் நடத்தப்பட்டன. அவற்றின் ஒரு பகுதியாக அண்மைச் சோதனைகள் அமைந்தன. கடந்த சில நாள்களில் பல சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் பங்களாக்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டன.
அமெரிக்கா, ஐரோப்பா, சீனா, ஜப்பான், இந்தோனீசியா ஆகியவற்றில் வசிக்கும் சிலரை இரண்டு நிலையங்கள் ஏமாற்றியது தெரியவந்தது. மின்னணுக் கருவிகளையும் கணினிகள், மடிக்கணினிகள், கைப்பேசிகள் உட்பட மற்றச் சாதனங்களையும் காவல்துறை யினர் கைப்பற்றினர். அவற்றின் மதிப்பு ஏறக்குறைய 2 மில்லியன் ரிங்கிட் ($632,000).
முதல் சம்பவத்தில், மோசடிக் கும்பலைக் காவல்துறையினர் வளைத்துப் பிடித்தனர். அந்தக் கும்பல் சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்பில் ஐந்து தளங்களில் கிட்டத்தட்ட 25 வீடுகளில் சட்டவிரோத நடவடிக்கைகளை நடத்திவந்தது தெரியவந்தது.
பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலோர் சீனாவையும் இந்தோனீசியாவையும் சேர்ந்தவர்கள்.“அவர்கள் முக்கியமாக முதியவர்களை இலக்காகக் கொண்டு, காதல் மோசடிகள், நாணய மோசடிகள், மின்னிலக்க நாணய மோசடிகள் முதலியவற்றின் மூலம் பெருந்தொகை யை ஈட்டியதாகக் கூறப்படுகிறது,” என்று அந்த வட்டாரங்கள் கூறின. பிடிபட்டோரில் அதிகமானவர்கள் சீனா, இந்தோனீசியா, மியன்மார் நாடுகளைச் சேர்ந்தவர்கள்.




