Vimarsagan Media

Home » Malaysia » வாகன அணிவகுப்புகளின் போது சாலைப் பயனாளிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்:-டென்னிஸ் லிம்

வாகன அணிவகுப்புகளின் போது சாலைப் பயனாளிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்:-டென்னிஸ் லிம்

தேசிய மாதக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நடத்தப்படும் வாகன அணிவகுப்புகளின் (convoys) ஏற்பாட்டாளர் கள், தங்கள் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்குத் தெரிவித்து காவல்துறையின் கருத்துகளைப் பெற வேண்டும் என்றும், அனைத்து சாலைப் பயனாளிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் போக்குவரத்து விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பினாங்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

வாகன அணிவகுப்பு நடவடிக்கைகளை காவல்துறை தடுக்கவில்லை என்று கூறிய பினாங்கு காவல்துறைத் தலைவர் டத்தோ டென்னிஸ் லிம், பங்கேற்பாளர்கள் தமக்கும் மற்ற சாலைப் பயனாளிகளுக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஆபத்தான அல்லது கவனக்குறைவான செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

“பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தக்கூடிய வகையில் அணிவகுப்பை அளவுக்கு அதிகமாகவோ அல்லது கட்டுப்பாடின்றியோ நடத்த வேண்டாம். பாதுகாப்பிற்காகப் போக்குவரத்து விதிகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படுவதையும், வாகனங்கள் நல்ல நிலையில் இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்,” என்று அவர் கூறினார்.

இங்கு நடைபெற்ற 69-வது தேசிய தின மற்றும் 219-வது காவல்துறை தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியான, ராயல் மலேசிய காவல்துறை (PDRM) மற்றும் ஈப்போ சூப்பர் பைக்கர்ஸ் கிளப் (ISBC) ஆகியவற்றின் தொண்டு நோக்கம் கொண்ட மோட்டார் சைக்கிள் அணிவகுப்பு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த பிறகு அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

காவல்துறைத் தலைவர் டான் ஸ்ரீ முகமது காலித் இஸ்மாயிலைப் பிரதிநிதித்துவப் படுத்தி, நெகிரி செம்பிலான் காவல்துறைத் தலைவர் டத்தோ அல்சாஃப்னி அகமதுவும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இந்த மாதம் தேசிய தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் பல்வேறு நடவடிக்கை களை ஏற்பாடு செய்வதால், மோட்டார் சைக்கிள் மற்றும் வாகன அணிவகுப்பு களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; எனவே, இந்தக் காலகட்டத்தில் இந்த அறிவுறுத்தல் மிகவும் முக்கியமானது என்று லிம் குறிப்பிட்டார்.

Scroll to Top