Vimarsagan Media

Home » Malaysia » கடல்துறைத் தற்காப்பு ஒத்துழைப்பை வலுப்பெற ஜப்பான், மலேசியா ஒப்புதல்

கடல்துறைத் தற்காப்பு ஒத்துழைப்பை வலுப்பெற ஜப்பான், மலேசியா ஒப்புதல்

கடல்துறைத் தற்காப்பு மற்றும் எரிசக்தி விநியோகங்கள் ஆகியவற்றுக்கான ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பானியப் பிரதமர் சானே தக்காய்ச்சி யும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

சீனாவின் கடல்சார் உரிமைகோரல்கள், போரினால் ஏற்பட்ட பொருளியல் சீர்குலைவுகள் போன்றவை குறித்த பொதுவான கவலைகளின் அடிப்படை யில் அந்த உடன்பாடு அமைந்துள்ளது.

“தற்காப்பு அம்சங்களைப் பொறுத்த வரை கடல்துறைப் பாதுகாப்பின் அவசியம் மீதான பொதுவான புரிதலை நாங்கள் இருவரும் பகிர்ந்து கொண்டோம்,” என்று தக்காய்ச்சி (ஜூன் 10) தோக்கியோவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டு ராணுவப் பயிற்சிகள் தொடரும் என்றும் ராணுவத் தளவாடங்களை ஜப்பான் வழங்குவதற்கான கூடுதல் வாய்ப்புகள் ஆராயப்படும் என்றும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு முக்குளிப்பு உதவிக் கப்பல்களையும் வானொலி அலைவரிசை வழியான தொடர்புக் கருவிகளையும் மலேசியாவுக்கு ஜப்பான் வழங்கியது.

அந்தச் செய்தியாளர் கூட்டத்தில் பிரதமர் அன்வார் பேசும்போது, பொருளியல் மற்றும் அரசதந்திர ஒத்துழைப்பு மூலம் ஒரே மாதிரியான கருத்துடைய நாடுகளின் ஆழமான உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஜப்பானின் தாராள, திறந்த இந்தோ-பசிபிக் தொடக்க முயற்சிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

Scroll to Top