இந்த மாதத் தொடக்கத்தில் பந்திங் பகுதியில் தனது வகுப்புத் தோழியை கத்தியால் குத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 15 வயது மாணவி மீது, குறிப்பிட்ட சமூகங்கள் அல்லது குழுக்களின் தாக்கம் ஏதேனும் இருந்ததா என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இணையவழி அரட்டை (chat) குழுக்கள் உட்பட சில குறிப்பிட்ட குழுக்களில் நடந்த உரையாடல்கள் சந்தேகத்திற்குரிய மாணவியின் செயலைத் தூண்டியிருக் கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக சிலாங்கூர் மாநிலக் காவல் துறைத் தலைவர் ஷசெலி கஹார் கூறியதாக ‘பெரிதா ஹரியான்’ (Berita Harian) செய்தி வெளியிட்டுள்ளது.
“வாட்ஸ்அப் (WhatsApp) குழுக்கள் அல்லது பிற குழுக்களில் நண்பர்களுக்கு இடையே நடந்த கருத்துப் பரிமாற்றங்கள் இதில் அடங்கலாம்; அத்தகைய உரையாடல்கள் அந்த மாணவி அவ்வாறு செயல்படத் தூண்டியிருக்கக்கூடும்.
“இருப்பினும், இதில் அதே பள்ளியைச் சேர்ந்தவர்கள் யாரும் சம்பந்தப்பட வில்லை,” என்று இன்று சிலாங்கூர் மாநிலக் காவல் துறைத் தலைமை யகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாகக் கைது செய்யப்பட்ட 14 வயது சிறுமிக்கும் இச்சம்பவத்திற்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை என்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
சந்தேகத்திற்குரிய மாணவி எழுதியதாக நம்பப்படும் மற்றும் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட குறிப்புகள் குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருவதாக ஷசெலி தெரிவித்தார்.
அந்தக் குறிப்புகள் வழக்கின் முக்கிய ஆதாரங்களில் ஒரு பகுதியாக இருப்பதால், அவை இணையத்தில் பரப்பப்பட்டது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
நுரையீரல் காயம் மற்றும் 16 இடங்களில் கத்திக் குத்து காயங்களுக்கு ஆளான பாதிக்கப்பட்ட மாணவி, மருத்துவமனை யிலிருந்து வீடு திரும்பியதாகவும், தற்போது வீட்டில் குணமடைந்து வருவதாகவும் ஷசெலி தெரிவித்தார்.




